12.11.2020

 பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் 


 விளாந்தர் /ஒளிக்கூண்டு  (அரிக்கன் விளக்கு )


  காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக்கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு .


அம்மி 


  குழவி கொண்டு மிளகாய் , தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் .


அண்டா 


  அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம் .


அடுக்குப்பானை 


 ஒன்றன் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை ) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு . இதில் உப்பு , புளி , தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர் .


அடிகுழாய் 


கைபிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்த்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய் .


ஆட்டுக்கல் 


வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும் குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம் .


விரல் உறை 


தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை .


ஒட்டியாணம் 

  

  பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப்பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம் .


எந்திரம் 


( அரிசி ,உழுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ ,உடைக்கவோ பயன்படுத்தப்படும் ) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முனையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம் .இதைத் திரிகல் , திரிகை ,இயந்திரம் என்றும் கூறுவர் .


உரல் 


  வட்டவடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களை குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம் 


உரி 


பால், வெண்ணை , தயிர் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும் , உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு .


குஞ்சம் - குஞ்சலம் 


பெண்களின் சடையில் இனைத்துத் தொங்கவிடப்படும் , கயிற்றால் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள் .


குடுவை 


குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயனப்டுத்தும் , புடைத்த நடுப்பகுதியும் , சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற முடியும் கொண்ட கலன் .


கோகர்ணம் 


ரசம்,மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில் , ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம் .


கொடியடுப்பு 


ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு .


சுளகு 


வாய்ப்பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட ஒரு சாதனம் . தானியங்களை புடைப்பதற்கு பயன்படும் முறத்தைவிடச் சற்று நீளமான ஒரு கருவி 


தாவணி 


இளம் பெண்கள் அணியும் , ஒரு சுற்றி வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நிலைத்திருக்கும் குறைவான ஆடை 


தொடி 


பெண்கள் தோளை அடுத்த கைப்பகுதியில் அணிந்துகொள்ளும் , பிடித்தாற்போல் இருக்கும் அணிவகை 


நடைவண்டி 


குழந்தை நடைபழகுவதற்காக , நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மார்ச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விலையாட்டுச் சாதனம் .


பஞ்சமுகவாத்தியம்


கோயில்களில் பூஜையின் பொது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதற்கான பெரிய குடம் போன்ற ஒரு தாளவாத்யக் கருவி .


பாக்குவெட்டி 


சற்றுத் தட்டையான அடிப்பகுதியும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியும் கொண்ட சாதனம் . பாக்கு வெட்டுவதற்கு பயன்படும் .


பிரிமணை 


பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வாகையில் அவற்றின் அடியில் வைக்கும் பிரிகளைக் (வைக்கோல் ) கொண்டு வளையும் வளையம் போல் பின்னப்பட்ட சாதனம் .


புல்லாக்கு 


மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணிகலன் .


முறம் 


தானியங்களை புடைப்பதற்கு பயன்படும் நுனிப் பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம் .


லோட்டா 


நீர் குடிப்பதற்கான நீள உருண்டை வடிவக் குவளை 


மரப்பாச்சி 


பெண் குழந்தைகளுக்கான மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை .


இந்த பொருள்கள் எல்லாம் புழக்கத்தில் இல்லை என்ற கூறலாம் . அவற்றை எல்லாம் சேமித்து பாதுகாத்து அடுத்தடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம் .


நன்றி !

12.05.2020

 

குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள 96 வகை மலர்கள் !


குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள 96 வகை மலர்கள் :

அரும்பு , அதிரல் , ஆம்பல் , அவரை . அனிச்சம் ,ஆத்தி ,ஆரம் , ஆவிரை ,இருள்நாளி ,இலவம் , ஈங்கை ,உந்தூழ் ,எருவை , எறுழம் , கண்ணி , கரந்தை , கருவிளை ,காஞ்சி , காந்தள் ,காயா,காழ்வை , குடசம் , குரலி , குரவம் , குருக்கத்தி , குருகிலை , குறுந்தம் , குவளை , குளவி , குறிஞ்சி , கூவிரம் , கூவிளம் ,கைதை ,கொகுடி , கொன்றை , கோங்கம் , கோடல் , சண்பகம் , சிந்து , சுள்ளி , சூரல் ,செங்கோடுவேரி ,செம்மல் ,செருந்தி , செருவிளை , சேடல் , ஞாழல் , தணக்கம் , தளவம் ,தாமரை , தாழை , தில்லை, திலகம் , தும்பை ,துழாய் , தோன்றி , நந்தி , நரந்தம் , நறவம் , நாகம், புன்னாகம் , நெய்தல் , நறு நெய்தல் , பகன்றை , பசும்பிடி ,, பயினி ,பலாசம் , பாங்கர் ,பாதிரி , பாரம் , பாலை , பிடவம் , பிண்டி , பித்திகம் , பீரம் , புண்ணை , பூளை , போங்கம் , மணிச்சிகை , மராஅம , மருதம் , மா , மாரோடம் ,முல்லை , கல்வர்முல்லை , மௌவல் , வகுளம் ,வஞ்சி , வடவனம் , வழை ,வள்ளி , வாகை , வாரம் , வாழை , வானி ,வெட்சி , வேங்கை ,வேரல் , வேரி என்பன ..

நன்றி !

12.01.2020

 

                           புழுக்கம் ..!

 

      ஒரே புழுக்கமா இருக்கே … குளிக்கலாமா என்று நினைத்துக்கொண்டே துண்டை கையிலெடுத்தேன்  , அப்போது இண்டர்காம் சிணுங்கியது . யாரு இந்நேரத்துல என்று நினைத்தபடியே ரிசீவரை எடுத்தேன் . 'ஹலோ ...  நான் முடிக்கும் முன்

 'சார் ,நா செல்வா ஹோட்டல் ரெசெப்க்ஷனிஸ்ட் பேசறேன் '.

'எஸ் '... என்றேன்

'சார் யாரோ கலைவாணியாம் ,லைன்ல இருக்காங்க ,ஒங்க கூட பேசணுமாம் ,லைன் குடுக்கட்டுமா ...?

'ம்ம்ம் …'

'சார் நா கலை பேசறேன் .. சாரி டு டிஸ்டர்ப் யு . ஒங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும் . ப்ரியா இருக்கீங்களா ? எப்ப வரலாம் …'

'என்னாச்சு …'

'சும்மாத்தான் … எனக்கு மனசே சரியில்லை அதான் … இழுத்தாள் .

' ம்ம்ம் ...  சரி வாங்க … இப்ப எங்க இருக்கீங்க ?'

'வடவள்ளி ..'

'ஓகே..வாங்க . நா ரூம்ல தா இருக்கேன் .. .வாங்க .'

           போனை வைத்துவிட்டாள். உற்சாகமாய் குளிக்கப்போனேன் . என் உள்மனம் இரண்டாக பிரிந்து கிடந்தது .'அவ நல்லப்பொண்ணு , ஏதோ மனக்கஷ்டத்துல இருக்கா அதான் ஆறுதல் தேடி ஒங்கிட்ட பேச வர்றா . தேவையில்லாதத மனசுல நெனச்சுக்கிட்டு திரியாதே என்று ஒரு மனம் சொன்னது . 'அட போடா …கஷ்டமாவுது ஒன்னாவுது ..சான்ஸ் கெடச்சா யூஸ் பண்ணிக்கோ ,போனா திரும்ப வராது, கெடச்ச வாய்ப்ப சரியா யூஸ்பண்ணிக்கோ என்று வழக்கு பேசியது இன்னொரு மனது .

            ஒரு வழியாக நான் குளித்து தயாராகியிருந்தேன் . எனக்கு மிகவும் பிடித்த அந்த பாடிஸ்பிரேவை கொஞ்சம் தூக்கலாகவே அடித்துக்கொண்டேன்.  என்னாச்சு எனக்கு ,நான் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறேன்  ? மனசு ஏன் என்னென்னமோ நெனைக்கிது ? ,என்னை நானே குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக்கொண்டேன் . ஏதோ ஒரு அழுத்தமான அதே நேரத்தில் தவறான எதிர்பார்போடுதான் நான் காத்திருந்தேன் அவளின் வருகைக்காக .

           ஒரு நாற்பது நாற்பத்தைந்து நிமிஷங்கள் கரைந்திருந்தது.  குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன் ,பாடிஸ்பிரேயை மீண்டும் ஒரு முறை நுகர்ந்து  பார்த்தேன் . அழைப்பு மணி ஒலிக்க எழுந்து கதவை  திறந்தேன். உள்மனமோ 'அடங்குடா அதிகப்பிரசங்கி 'என்று சொன்னது .

'வாங்க வாணி ' என்றேன் உதட்டோர புன்னகையோடு . நான் எப்போதும் அவளை அப்படித்தான் அழைப்பேன் . எல்லாரும் என்ன 'கலை' னு தான் கூப்புடுறாங்க , நீங்க ஒருத்தர் தான் வாணி னு கூப்புடுறீங்க , ஆனாலும் எனக்கு புடிச்சிருக்கு என்பாள் .

        அவள் உள்ளே நுழைந்து என்னைக்கடந்த போது  லேசான சுகந்தம் என்நாசியை  படர அவள் கண்ணிலும் கிளர்ச்சி ,  காரணமில்லாமல் என் மனத்திலும் ஒரு கிளர்ச்சி .  சேலையில் இருந்த அவள் தன் சுருண்ட கூந்தலின் கற்றை முடியை   முன் நெற்றியில் அலைய  அனுமதி கொடுத்திருந்தாள். மனம் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

ஒருவாறாக  சமாளித்துக்கொண்டு நிகழ்காலத்திற்கு வந்தேன் . எதிரில் இருந்த சோபாவை காட்டினேன் . கருப்பாய் இருந்தாலும் ரொம்ப கலையாய் படுஅழகாய் இருக்கிறாளே … மீண்டும் மனம் தாவ ஆரம்பித்தது .

 'என்ன சாப்புடுறீங்க ?' சம்பிரதாமாய் கேட்டேன் .

'ஒன்னும் வேணாம் சார் '

'நோ பார்மாலிட்டீஸ் … பீல் பிரீ என்றேன் உதட்டோர புன்னகையோடு .

'ஒரு பில்டர் காபி கெடைக்குமா?'

' வோ சுயூர்' . ஆர்டர் செய்தேன் சந்தோஷமாய் . ரொம்ப வழியாதே என்று உள்மனம் எச்சரிக்கை செய்தது .

'சார் ஒங்க பாடிஸ்பிரே  வாசன ரொம்ப சூப்பரா இருக்கு .என்ன பிராண்டு சார் ?'

' அப்பிடியா … எனக்கு ரொம்ப புடிச்ச பிராண்டு .பேர் சொன்னா நீங்க தப்பா நெனைக்ககூடாது...' பீடிகையோடு நிறுத்தினேன் .

'தப்பா நெனைக்க இதுல என்ன இருக்கு . சொல்லுங்க ' என்றாள்.

'காமசூத்ரா பாடிஸ்பிரே '

'சார் அப்பிடி ஒரு பிராண்டு இருக்கா ? . ஆச்சர்யத்தில் அவளின் பெரிய விழிகள் விரிந்தன  . உங்களுக்கு என்னென்னமோ தெரிஞ்சிருக்கு .'

இவள் என்ன ஆச்சர்யப்படுகிறாளா ? இல்ல தெரியாததுபோல் நடிக்கிறாளா ? எனக்கு நானே கேட்டுக்கொண்டேன் .

'காபி வந்திருந்தது . ஒரு சிப் சுவைத்துவிட்டு கீழேவைத்தவள் 'சூப்பர் சார் '  தேங்க்ஸ்  என்றாள் .

'ம்ம் ….  வீட்டுல எல்லாரும் சௌக்கியமா ?'  என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதோ உளறி வைத்தேன் .

'ஆல் ஓகே சார் ' ஆர்வமில்லாமல் பதில் சொன்னாள் .

'எப்படி வந்தீங்க ' …. மீண்டும் உளறிக்கொட்டினேன் .

'டாக்ஸில வந்தேன் ' ….

'ம்ம் ..சொல்லுங்க மேடம் ..

'சார் ப்ளீஸ் டோன்ட் கால் மீ மேடம் , எனக்கு அது புடிக்கல .ப்ளீஸ் கலைன்னு கூப்புட்டுங்க இல்லன்னா வாணின்னு கூப்புடுங்க' என்று கண்டிப்புடன் சொன்னவள் , ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தவள் சுரத்தை இல்லாமல் பேச ஆரம்பித்தாள் .

'எனக்கு மனசே சரி இல்ல சார் . கொஞ்ச நாளா எனக்கு எதிலும் இன்ட்ரெஸ்ட் இல்ல . மனசு எதிலும் யாரோடயும்  ஓட்டறதில்ல . பைத்தியம் புடிச்சிடும் போலிருக்கு… ' என்று நிறுத்தினாள் .

          மீதமிருந்த காபியை ஒரே சிப்பில் உறிஞ்சிவிட்டு கப்பை கீழே வைத்தவள் ,அருகில் இருந்த காகித தாளால் உதட்டை ஒற்றிக்கொண்டாள் . உதட்டு சாயம் கொஞ்சமாக அதில் குடியேறியிருந்தது .  மேலும்  அவளே  தொடர்ந்தாள் 'வீட்டுக்கு போனா மாமியார் ,மாமனார் நொய்யி நொய்யினு … ‘ ஏதாவுது குத்தம் கண்டுபுடிச்சி பேசிட்டே இருக்காங்க . ஒரே எரிச்சலா இருக்கு '.

        'ஆபிசுக்குப் போனா அந்த ஓனரோட பையன் யுவன் தொல்லை . எப்ப பாத்தாலும் ஒரே ஜொள்ளு . காரணமே இல்லாம வந்து வழியறதே வேலையா வச்சிருக்கான் ராஸ்க்கல் ' என்றால் கடுங்கோபமாக . அந்த ஜேசுராஜ் தொல்ல வேற  . .பக்கத்து ஸீட்டுலயே ஒக்காந்துக்கிட்டு பல்லைளிச்சிகிட்டு என்னையே பாத்துகிட்டு நிக்கிது . அப்பன் வயசுல இருந்துகிட்டு இப்பிடி நடக்கிறமேன்னு கொஞ்சம்கூட அறிவில்ல . அந்த ஆளோட பேச்சு பார்வை எதுவுமே சரில்ல.  எனக்கு அங்க யாரை பாத்தாலும் கோவம் கோவமா வருது …' நீண்ட வெறுப்பு பத்திரம் வாசித்து நிறுத்தியிருந்தாள்.

அவள் அழகில் மயங்கி போயிருந்த நான் சுதாரித்துக்கொண்டு 'அப்பொறம் ? ' என்றேன் .

அவளுக்கு கோவம் வந்துவிட்டது .'நா என்ன கதையா சொல்றேன் . அப்புறமுனு கேக்கிறீங்க '..

'இல்ல மா முடிஞ்சுதா இல்ல இன்னும் இருக்கான்னு கேட்டேன் ' என்றேன் .

'அவ்ளோதான் ' என்றாள், குரலில்  சின்ன ஏமாற்றம் தெரிந்தது .

'சரி ஒங்க பிரச்சினை என்னான்னு எனக்கு புரிஞ்சிடிச்சி . உங்க பிரச்சினைக்கு நா  என்ன பண்ணமுடியும் ? கேள்வியோடு அவள் முகத்தை எதிர்கொண்டேன் .

'சார் என்ன வெறுப்பேத்தாதிங்க … ' என்று ஒற்றை வரியில் சூள் கொட்டினாள். சற்று நேரம் எங்களுக்கிடையே மௌனம் நிலவியது .

             எனக்கு புரிந்துவிட்டது அவளின் பிரச்சினை என்னவென்று . அவளோ இருபதுகளின் மத்தியில் இருப்பவள் , சாதி விட்டு சாதி மாறி காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டவள்   , அவள் வீட்டில் எதிர்ப்பு வேறு  ,கணவன் வெளிநாட்டில்  இருக்கிறான்  , இவளுக்கு இன்னும் விசா கிடைத்தபாடில்லை , மாமியார் , மாமனார் நச்சு வேறு , ஆஃபிஸில் ஜொள்ளர்கள் அதிகம் , சிலர் அவ்வப்போது எல்லைமீறுவதும் உண்டு . எப்படி எல்லாமாய் சேர்ந்து அவளை அவளது மனதை பாடாய்படுத்துகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது . எல்லாவற்றிற்கும் மேலாக வயதும் தனிமையும் அவளை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது  .

'நா சொல்றது புரியுதா உங்களுக்கு ? உங்கள ஒரு நல்ல பிரண்டா நா பாக்கறேன் . என்ன புரிஞ்சிக்கிவிங்கன்னு நெனச்சேன் .. நா தழுதழுக்க அவள் உணர்ச்சிவயப்பட்டாள் .

' எல்லாம் எனக்கு புரியுது வாணி ..கூல் … கூல் ப்ளீஸ் . உங்குளுக்கு என்ன சொல்றதுன்னுதான் யோசிக்கிறேன் . இதை பத்தி ஐ மீன் ஒங்க மனநெல பத்தி ஒங்க கணவர்கிட்ட பேசினீங்களா ?'

'சுரேஷ் நேத்து ராத்திரி போன் பண்ணார் . இன்னும் பழைய ப்ராஜெக்ட் முடியலையாம் . ஆகஸ்ட்ல முடிஞ்சிருமாம் .புது ப்ரொஜெக்ட்க்கு போறப்ப விசா கெடச்சுருண்ணும் சொன்னார் . ஆக்ஸ்ட்ல வந்துட்டு அக்டோபர்ல போய்டலாம்ன்னு சொன்னார் என்றவள் மேலும் தொடர்ந்தாள் 'நா உங்ககிட்ட எதையும் மறச்சு பேசனதில்ல .உங்களோட நட , ஓட, பாடி லாங்குவேஜி ,சிரிக்கிறது, மேனரிசம் எல்லாம் அசைப்புல அவரை மாதிரியே இருக்கு .'

"நா சொல்லவர்ரது ஒங்களுக்கு புரியலையா" ன்னு கேட்டிங்களே அப்பவே எனக்கு எல்லாம் புரிஞ்சிடிச்சி . ஒங்களுக்கு தனிமை பிரச்சினை , ஒங்களோட அவர மிஸ்பண்ட்ரீங்க . மனசுக்கு புடிச்ச வாழ்க்க,  தொண தூரத்துல இருக்கறதால ஒங்களுக்குள்ள ஒரு வெறுமை பரவிருக்கு . அதான் மனசு சஞ்சலப்படுது . அதனால தான் யாரைப்பார்த்தாலும் கோவம் வருது , அந்த ஜொள்ளர்களை  சமாளிக்க முடியாம தடுமாறுறீங்க .  ஏம் ஐ கரெக்ட் ? 'கேள்வியோடு நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் .

சில நொடித்துளிகள் அமைதியாக தரையை பார்த்துக்கொண்டிருந்தாள்

.கண்கள் கலங்கி இருந்தன ,மொத்த உணர்ச்சியையும் முகம் பிரதிபலித்தது .

'நீங்க சொல்றது உண்மதான், ஐம் ஸ்ட்ராகிளிங் அண்ட் லோன்லினெஸ் கில்லிங் மீ ..' நா தழு தழுக்க சொன்னாள் .

' ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் , ஒரு விதத்துல  ஒங்கள நா பாராட்றன் , யாரோ ஒருத்தர்கிட்ட ஒங்க பிரச்சினையை சொன்னாத்தான் அதுக்கு ஒரு வடிகால் கிடைக்கும் . அந்த யாரோ ஒருத்தர் யாருங்கறது  ரொம்ப முக்கியம் , அந்த யாரோ ஒருத்தர் உங்களோட தனிமைய தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிற ஆளா இருக்க கூடாது , அப்பதான் ஒங்க ப்ரஸ்ட்ரேஷன் தொலையும் . ஒங்களோட எதிர்பார்ப்புல எந்த தப்பும் இல்ல ,யு ஆர் எ பிரேவ் கேர்ள் , ஐ அப்ப்ரிசியேட் யு வாணி .'  என்று சொல்லிட்ட்டு நானே மேலும் தொடர்ந்தேன் .

'நா உண்மைய சொல்லுனும்னா , ஒங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் . நீங்க என்கிட்ட ஓப்பனா பேசறது நெருக்கம் காட்றது எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் . நா ஒன்னும் பரமயோக்கியன் லாம் கெடயாது . வாய்ப்பு கெடச்சா பல பாத்திரத்துல சாப்புடுறவன் . ஆனா ஒங்க மேல எப்பவுமே மரியாதை கலந்த அட்ராக்ஷன் உண்டு . நீங்க போன் பண்ண அப்ப நா ரொம்ப குஷியாயிட்டேன் . நீங்களும் இப்ப இயலாமைல தான் இருக்கீங்க . கட்டுப்பாடு இங்கிறது ஒன்னும் பெரிய இரும்பு கேட்டு இல்ல . அது ஒரு மெல்லிய நூலிழை , அத அறுத்தெறிய உடல் வலிமை தேவையில்லை . பெரிய அளவில் மனவலிமை தேவை . நாம்ப ரெண்டு பேரும் கட்டுப்பாட்டை மீறதுக்கு ரொம்ப நேரம் ஆவாது . ஆனா என் உள்மனசு அத ஏத்துக்குல, அதுக்கு உங்க மேல இருக்குற மரியாதை மட்டுமில்ல உங்களோட அந்த ஓபன் டாக்கும் தான் காரணம்  . உங்களோடது லவ் மேரேஜ் ,நீங்க அவரோட மேல எவ்ளோ பிரியம் வச்சிருக்கீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது . நா என்னதான் ஒங்க கணவர் மாதிரி இருந்தாலும் ,என்னோட மேனரிசம் அவர மாதிரி இருந்தாலும் நான் உங்க கணவர் இல்லைங்கிறதுதான் எதார்த்தம் .

 'ஒரு ப்ரண்டா ஒங்களுக்கு ஒரு அட்வைஸ் . இங்கிருந்த போனவொடனே உங்க கணவருகிட்ட பேசுங்க . ஒங்க தனிமைய, ஒங்க எதிர்பார்ப்ப, ஒங்க தேவைய ஓப்பனா அவருகிட்ட சொல்லுங்க .  ஆப்ட்ரால் அவரு ஒங்களோட பெட்டெர்ஹாப் . ஓப்பனா பேசறதுல ஒரு தப்பும் இல்ல . ஒன்னு அவர வேலையைவிட்டு இந்தியாவுக்கு வரச்சொல்லுங்க ,இல்லன்னா சீக்கிரமா நீங்க அவரு கூட அங்க போயி செட்டுல ஆகிடுங்க . தேவைப்பட்ட டூரிஸ்ஸ்ட் விசாவுல கூட போகமுடியும்  . சேந்திருந்திங்கன்னா ஒங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது .ஆல் தி பெஸ்ட் ' என்றேன்.

'சார் ரொம்ப தேங்க்ஸ்  ,நா இப்ப தெளிவாயிட்டேன் . என்ன பேசுறோம் ,என்ன செய்றோம்னு கூட என்னால யோசிக்கமுடியல . ரொம்ப கொழம்பிபோய்ட்டேன் . நீங்களும் ஓப்பனா பேசுனீங்க , அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு .தயவு செஞ்சி என்ன தப்பா நெனைக்க வேண்டாம் ப்ளீஸ் '.

'டோன்ட் ஒர்ரி .நா ஒங்கள ஒரு நாளும் தப்பா நெனைக்கமாட்டேன் . பை ஹார்ட் யு ஆர் சோ கிளீன் .பேசிக்கலா நீங்க ரொம்ப நல்ல பொண்ணு . சமய சந்தர்ப்பங்கள் தான் மனுஷன தப்பு பண்ண வைக்குது . கொஞ்சம் சுதாரிச்சுட்டா எல்லா ப்ராபளமும் சரியா போய்டும் . அப்புறம் இன்னொரு விஷயம் ,நாம ரெண்டு பெரும் இனிமே சந்திக்க வேண்டாம் . ஒங்கள பாத்து நானும் என்ன பாத்து ஒங்க மனசும் அலைபாய வேண்டாம் .இதுவே கடைசி சந்திப்பா இருக்கட்டும் . என்ன சொல்றீங்க '.

கொஞ்சம் யோசித்தவள் 'சார் அப்பிடியே ஆகட்டும் 'என்று சொல்லியபடி  எழுந்து நடக்க தொடங்கினாள் . எனக்கு நிம்மதியாக இருந்துது , அவளை நானறிந்த வரையில் ,அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் .

'போடா பைத்தியக்காரா .. என்றது ஒரு மனம் .நீ செஞ்சதுதான் சரி என்றது இன்னொரு மனம் .

              இந்த சம்பவங்கள் நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்குப் பிறகு ஒரு ஏப்ரல் மாதத்தில்  வேலை நிமித்தமாக நான் கோவை சென்றிருந்தேன்  . கோவை விமான நிலையத்தில் அப்படியொன்றும் நெரிசல் இல்லை . அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகள் தெரிந்தன . நான் வந்திறங்கிய பாம்பே பிளைட் மற்றும் ஓவர் ஓவர்சீஸ் பிளைட் , இரண்டிலும் வந்திறங்கிய பயணிகள் என்ற அளவில் விமான நிலையம் பரபரப்புக் காட்டியது   .  நான் எதிர்பார்த்ததை விட கோவை நன்றாகவே வளர்ந்திருந்தது . பெல்ட் நம்பர் 3 யின் அருகில்   என்னுடைய பெட்டிகளின் வரவிற்காக காத்திருந்தேன்  .

'சார் .. சார்.. நீங்க வாசு சார் தானே .. என்று கேட்டபடியே ஒரு பெண் என் எதிரில் நின்று கொண்டிருந்தாள் . நாற்பதுகளின் மத்தியிலோ அல்லது இறுதியிலோ இருக்கக்கூடும் . கொஞ்சமாய் நரைமுடி ,அதிகம் ஒல்லியுமில்லை அதிகம் உடம்பும் போடவில்லை ,நடுத்தர தேகம் . உதடுகளில்  புன்முறுவல் வழிய நின்றிருந்தாள் . ஒப்பனையில்ல முகத்தில் உணர்ச்சி கோடுகள் நெளிந்தன  .   என்னால் அந்த பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை .

'எஸ் .. ஐம் வாசு . நீங்க ? '

'என்ன தெரியலையா ..?'

'ம்ம்..சாரி ,எனக்கு உங்கள யாருன்னு தெரியல ?

'சார் நா வாணி ,கலைவாணி .

'எ.. எ .. எந்த வாணி ...? ' கேட்டுக்கொண்டே மேல்தாடையை லேசாக சொரிந்துகொண்டேன் . எனக்கு உடனே நினைவுக்கு வரவில்லை . சில நிமிட முயற்சிக்குப்பின் நினைவுக்கு வந்தாள் வாணி .

நல்லா இருக்கீங்களா ?

ஐயாம் பைன் . நீங்க ?

நல்லா இருக்கேன் . அவரு ரெஸ்ட்ரூம் போயிருக்காரு . ஒங்கள பாத்தேன் ,ஒரு ஹாய் சொல்லலாமேன்னு  … அவள் முடிக்கவில்லை

... ஓ ! நைஸ் டு சி யு அகைன்  .ரொம்ப வருஷங் கழிச்சி ஒங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம் .

சி யு சார் . அவரு வந்துட்டாரு ... போய்விட்டாள் .

என்ன நடக்கிறது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல்  நான் இன்னும் யோசித்துக் கொண்டு நிற்கிறேன் அங்கேயே ...

 

 

மௌனம் -- 19 வித சூழ்நிலைகள் மற்றும் அதன் பொருள்...


மௌனம் என்ற சொல் நான் அறிந்த வரையில் 19 வகையான பொருளை தருகிறது .

* பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பெண்ணின் மௌனம் --- சம்மதம் /ஒப்புதல்

* நாம் விரும்பிய சில உறவுகளை பிரியும் போது மௌனம் -- துன்பம்

* இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது மௌனம் --நம்பிக்கை

* நம் இதயத்தில் அமர்ந்த அந்த காதலில் மௌனம் -- சித்ரவதை

* நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும்போது மௌனம் -- பொறுமை

* நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் -- அடக்கம்

*திருமணக்கோலத்தில் உள்ள அமைதியின் போது மௌனம் -- வெட்கம்

* தவறுதலாக தவறு செய்தபோது மௌனம் -- பயம்

* ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் --எதிர்பார்ப்பு

*கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம் --ஆற்றாமை

* இலக்கை அடைய ஒருமுகப்படுத்தும் முயற்சி மௌனம் -- வலிமை /சக்தி

* தீவிரமாகப் போராடும்போது மௌனம் -- ஒருமுகத்தன்மை

* பிடிக்காத செயல்களை இயலாமையின் காரணமாக ஒத்துக்கொள்ளும் மௌனம் --எதிர்ப்பு

* எதிர்பாராத தோல்வி மற்றும் கேலிப்பேச்சு மௌனம் -- அவமானம்

* நம்மைவிட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும்போது மௌனம் --சொற்களற்ற துயரம்

* நம்மை கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது மௌனம் -- ஆத்திரம் , சினம்

* கற்ற வித்தைகளை கையாளும் போது மௌனம் -- மகிழ்ச்சி

* அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் -- எதிர்பார்ப்பில்லாத உறக்கம்

* உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலாரை சூழ்ந்திருக்கும் மௌனம் -- சாவு / இறப்பு .

நன்றி !

 

கோவில் சுவற்றில் சிவப்பு வெள்ளை நிற பூச்சு பூசுவதன் நோக்கம் - காரணங்கள்...


வியப்பூட்டும் எட்டு உண்மைகள் :

* மனிதனின் உடம்பில் , உதிரத்தில் வெள்ளை அணுக்கள் , சிவப்பு அணுக்கள் இருக்கும் . சிவப்பு அணுக்கள் உயிரி காற்றை நம் உடலின் பகுதிகளுக்கு எடுத்து செல்கிறது . வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு வலிமையை நமக்கு அளிக்கிறது . இதை குறிக்கவே கோவிலில் சிவப்பு வெள்ளை நிறம் அடிக்கப்படுகிறது .

* ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது , பெண்களின் கருமுட்டை சிவப்பு நிறமுடையது . இவை இரண்டும் சேர்ந்துதான் உயிர் உண்டாகிறது . இதனையும் கோவில் வண்ணம் குறிக்கிறது . மனதில் உடலில் உயிர் உண்டாவதைபோல் இறைவனின் மனம் கருவறையில் உள்ளது . அதனால் தான் கோவிலின் இறைவனின் உறைவிடமும் கருவறையை .

* கோவிலின் வாயில் படியை தொட்டு வணங்குவதில் பின்னணியில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன . நாம் குனிந்து தொடுத்தாம்பொது நமக்கு பணிவை ஏற்படுத்துகிறது . உடம்பில் சூரிய நாடியை இயக்குகிறது . படிக்கட்டை தொட்டபின் நம் நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும் . அப்போது நம்மிடம் மறைந்துள்ள தீய சக்திகள் விலகி தெய்வ சந்நிதியில் இருந்து சில அதிர்வலைகளை நம்மிடம் உண்டாக்கும் .

நன்றி !