11.16.2020

 சொல் விளையாட்டு ...


  இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு .

சான்றாக " தேர் ஓடுவது எதனால் ?" " தெருவை மெழுகுவது எதனால் ? " என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில் 

"அச்சாணியால் , அச்' சாணியால் "என்பது .

தேர் ஓடுவது அச்சாணியால் , தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்ற பதில் விளக்கம் கிடைக்கும் .

 " நீ வசிக்கும் ஊர் எது ?" , " உன் காலில் காயம் வந்தது எப்படி ? " என்ற இரு கேள்விகளுக்கு ஒரே பதில் .. " செங்கல்பட்டு " என்பது .

" சாம்பார் மணப்பதேன் ?" , " உடல் நலிவதேன் " என்ற இரு வினாக்களுக்கும் ஒரே பதில் " பெருங் காயத்தால் " என்பது .

இன்று ஆங்கில வழிக்கு கல்வி பெருகிவிட்டதாலும் , தமிழை ஏதோ கடமைக்கென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைத்து கற்பிப்பதாலும் இன்றைய பிள்ளைகளுக்கு பெரும்பாலும் தமிழ் புலமையும் ஆர்வமும் குறைந்துவிட்டது . அவர்கள் பெரும்பாலும் மனனம் செய்து படித்து கடந்து விடுகிறார்கள் . இந்த செயல் மிகவும் ஆபத்தானது ,எதிர்கால சந்ததியை , தமிழ் மொழியை அழிக்கக்கூடிய செயல் என்பதை நம்மை அறியாமல் நாம் செய்துகொண்டிருக்கிறோம் . இத்தகைய சொல்விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும் , சிந்தனைத்திறனையும் , ஆர்வத்தையும் , தமிழில் புலமையையும் ஒரு சேர வளர்க்கும் . பெற்றோர்களே சிந்தியுங்கள் ... தாய்மொழி வழி கேள்வி சிறந்த சிந்தனையாளனை வளர்த்தெடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

  சொல்லறிவோம்... இயக்குநர் !


    இயக்குனர் / இயக்குநர் - இதில் எது சரி ....


    இயக்குநர் , பெறுநர் , ஓட்டுநர் , அனுப்புநர் என்ற தான் எழுதவேண்டும் .

    வந்தனர் , சென்றனர் என வினைச்சொல்லின் பன்மை விகுதிக்கு மட்டுமே "னர்" பயன்படும் .

   அந்த திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கினர் என்ற எழுதவேண்டும் .

    ஒரு செயலை செய்பவரைக் குறிப்பிடும்போது "நர்" விகுதி சேர்ப்பதே சரி , அதுவே இலக்கண விதியும் கூட .

 சம்பளம் என்ற வார்த்தை  பிறந்த கதை ...


  பழங்காலத்தில் செய்த வேலைக்கு  சம்பளமாக  நெல்லும் உப்புமாகக் கொடுப்பார்களாம் . ஏன் எனில் அவை இரண்டும் தான் சாப்பாட்டின் முதன்மையான மூலப்பொருள்கள் என்பதால் . நெல் வகைகளில் சிறந்த சம்பாவும் உப்பும் சேர்ந்து " சம்பளம்" ஆயிற்று .  அளம் என்றால் உப்பையும் உப்பு விளையும் இடத்தையும் குறிக்கும் காரணப்பெயர் ஆகும் .


   எனவே சம்பா அளம் என்பது காலப்போக்கில் " சம்பளம் " என மாறியது . சம்பளம் என்ற சொல் தமிழ் சொல் தான் .


 தகவல் : சொல்லாராய்ச்சிக் கட்டுரை என்ற புத்தகத்திலிருந்து .

 அப்பாவின் அடையாளங்கள் ..!


    ஒடிந்த தோடு 

    வளைந்த மூக்குத்தி 

    உறைந்த உப்புத்தாரைகள் 

    கிழிந்த உதடு 

    கன்னத்தில் கைரேகைகள் 

    அப்பாவின் அடையாளங்கள் 

    அம்மாவின் அங்கங்களில் 

    ஆங்காங்கே ....!