7.24.2020

வடமொழிமயமான தமிழ்நாட்டு ஆறுகளின் பெயர்கள் !


பண்டைத் தமிழகம் இன்றைய ஆந்திரத்தின் கிருட்டினா நதி வரைக்கும் பரவி இருந்தது . அந்த காலத்தில் தமிழறிந்த பகுதிக்குள் பாய்ந்த ஆறுகள் அனைத்திற்கும் தமிழ் பெயர்களே இருந்தன . பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால் அந்த பெயர்கள் படமொழிப் படுத்தப்பட்டு பின்னர் அதுவே நிலைத்துவிட்டது .

கிருஷ்ணா ஆற்று நீர் கரிசல் நிலத்தில் பாய்ந்து வருவதால் கரிய நிறத்தோடு இருக்கும் . அதை உணர்த்தும் விதமாக கண்ணனின் நிறத்தோடு தொடர்புபடுத்தி கிருஷ்ணா நதி என்ற வடமொழி பெயர் நிலைத்தது . உண்மையான தமிழ் பெயர் " கரும்பெண்ணை " என்பதே . பெண்ணை என்றால் நல்ல நீர் பெருக்குடைய ஆறு என்று பொருள் .

காவிரி ஆற்றைக் " காவேரி " என்று வழங்குவதும் உண்டு . இகரம் , ஏகரம் ஆகும் இசைத்தமையால் வி என்பது வே என்று ஆகிவிட்டது . கா என்றால் சோலை , விரி -- விரித்தல் . செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்து செல்லுபவள் என்று பொருள் . இன்னொரு பெயர் " பொன்னி " .

தாமிரபரணி என்னும் ஆற்று பெயரும் வடமொழி தான் . அதன் தமிழ் பெயர் " தண்பொருநை ஆறு என்பதுவே . பாரதியார் தன்னுடைய பாடலில் காவிரி , தென்பெண்ணை , பாலாறு தமிழ் கண்டதொரு பொருநை என்று குறிப்பிட்டிருக்கிறார் .. தண் - தண்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள் . மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி பாய்வதால் தண்பொருநை ஆறு எப்போது குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் இந்த பெயர் வந்தது .

வைகை ஆற்றின் தூய பெயர் ' வையை என்பதே . வையைசூழ்ந்த வளங்கெழு வைப்பின் என்கிறது புறநானுறு . நாளடைவில் இது வைகை என்று மருவி வழங்குகிறது .

கொசஸ்தலை ஆறு -- திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடுவது . இதுவம் வாதமிழி பெயரே . உண்மையான சரியான பெயர் " கொற்றலை " என்பதே . சிறு சிறு அலைகள் மொழி விளையாடும் ஆறு என்ற பொருளில் அமைந்தது .

பவானி என்பதும் வடமொழி பெயரே . வானி ஆறு என்பதே சரியான தமிழ்ப் பெயர் . அது எப்படியோ காலப்போக்கில் பவானி என்று திரிந்து விட்டது . " சாந்து வரு வானி நேரினும் ' என்கிறது பதிற்றுப்பத்து (86 ) .இன்றைக்கும் பவனி ஆற்றங்கரையில் கீழ் பவானி , மேல் பவானி , பூவானி ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன .

இது பெரிய வானி ஆறு . இன்னொன்று சிறிய வானி ஆறு . இதைத்தான் "சிறுவாணி " என்று பிழையாக இன்று எழுதுகிறார்கள் .

அமராவதி ஆற்றின் உண்மையான தமிழ் பெயர் "ஆன்பொருநை " ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது ஆன்பொருநை .

பேரியாறு என்ற ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பாய்கிறது . அதுதான் மருவிப் போய் " பெரியாரு " என்கிறார்கள் . பேரி என்றால் முரசு . வெற்றி முரசு போல ஆர்பரித்தபடி பாயும் ஆறு என்ற பொருளில் பெரியாரு எனப்பட்டது .

அடையாறில் வெள்ளப்பெருக்கின் போது தேனடைகள் மிதந்து சென்றிருக்கின்றன , அதனால் அப்பெயர் வந்தது . அடையாறு என்பதை இன்று " அடையார் " என்று பிழையாக எழுதுகிறார்கள் .

கூவம் என்றால் கிணறு . வழியோரங்களில் கிணற்று நீர் வளத்தினைப் பெருக்கியபடி பாய்ந்ததால் கூவம் ஆறு என்ற பெயர் ஏற்பட்டது . அனால் இன்று கூவம் என்றால் கழிவு நீர் என்பது போல் பொருள் கொள்ளப்படுவது வருந்த தக்கது .

நன்றி ! கவிஞர் திரு மகுடேசுவரன் அவர்கள் .

கருத்துகள் இல்லை: