12.30.2012

மழலை அழலை !


தூங்கிய குழந்தை !
தாங்கிய தொட்டில் !
யுத்தம் ஒன்று நடத்தி
ரத்தமதை குடிக்க
அதரங்களை கடிக்க
திட்டமிட்டு வட்டமிட்டு
சத்தமிட்டு முத்தமிட
எத்தனித்த கொசு !
குழந்தையின் முகத்தில்
புன்முறுவல் !

தத்தளித்தது நம் மனசு !
உதவிக்கு எத்தனித்த
இறைவனின் மனசு
ரொம்பவும் இளசு !

அட ! அதிசயம் !
மின்சாரம் வந்துவிட்டது !
மின்விசிறியும் சுழன்றுவிட்டது !
மின்விசிறியின் மிதவேகத்தால்
கொசுவுக்கு போறாத காலம் !
தலை தெறிக்க ஓட்டம் !

இறைவனுக்கும் ஏனையோருக்கும்
வந்தது நிம்மதி !
குழந்தையின் முகத்தில்
இப்போதும் புன்முறுவல் !
எப்போதும் புன்முறுவல் !
மழலை அப்போதும்
எப்போதும் அழலை !

சிரிப்பு...!


உதடுகளின் விரிப்பு !
உள்ளக் கதவுகள்
மெல்லத் திறப்பு !
உண்மையான நகையின்
மென்மையானப் பிறப்பு !

நரம்புகளின் லேசான தளர்வு !
மனதை லேசாக்கும் -ஒரு
நேச உணர்வு !

மனித இனத்துக்கு மட்டுமே
இறைவன் தந்தது !
மருந்துக்கு கூட -பலர்
பயன்படுத்த மறுப்பது !

காசில்லாமல் வருவது !
கல்மனதையும் தகர்ப்பது !

உதடுகளை பிரித்து பிரித்து
உள்ளத்தில் இருந்து
சிரித்து சிரித்து
மனபாரத்தை இறக்கிவைப்போம் !
மரணத்தை துரத்தி வைப்போம் !

11.25.2012

தீபாவளி குழப்பம் ..!

வளிக்கு செவியில் வலி ..!
என்ன என்று விசாரித்தேன் ..
தீபாவளி கொண்டாடட்டம் !

9.19.2012

அடடா ..! பகுதி -1

நிலா அபகரிப்பு வழக்கு !
சூரியமன்றதில் 
அமாவாசையன்று ...

நில மகளுக்கும் 
விவசாயிக்கும் 
விவாகரத்து !
அடுக்குமாடி குடியிருப்பு 
கட்டி முடிப்பு ..

பருவமழைக்காக 
சிறப்பு வேண்டுதல் !
தலையை மழித்துக்கொண்ட 
மரங்கள் ..
இலையுதிர்காலம் தொடக்கம் !

இன்னும் படரும் ...

9.12.2012

ஏதோ நினைவுகளில் ...



ஆறு ஆண்டு காலம் 
எனக்கு வனவாசம் ! 
அதில் ஜானவசமும் 
இருந்தது ! 
சுகவாசமும் இருந்தது ! 

மோசமான காலமும் 
இருந்தது ! 
மோதிரக்கையால் குட்டுபட்ட 
படலமும் நடந்தது. 

ஆழமான நட்பையும் 
உணர்ந்தேன்! 
அடுத்து கெடுக்கும் 
கெடுத்தே வயிறு வளர்க்கும் 
வினோத ஜந்துக்களையும் 
பார்க்க நேர்ந்தது. 

சொல்பேச்சு கேட்ட, 
சமயத்தில் குறைநிறைகளை 
தரமகுறையாமல் எடுத்து சொன்ன , 
உறவுகளை உணர்வுகளை 
பெற்று இருந்தேன் 
என் குழுவில் என்பது 
பேரின்பம் தானே ! 

மனநிறைவோடு மீண்டும் 
மீண்டும் சிந்திப்போம் 
என்ற உள்ளுணர்வோடு ...

7.01.2012

ஆனி...!

ஆனி இவள் 
அதிசய ராணி ..! 
இளவேனிற் வாணி .! 
எங்கள் இதயம் தனை 
குளிர்விக்க தென்றல் தனை 
கொண்டு வா நீ ! 

இனிய இளமாலை 
மழை துளியை தா நீ ! 
தமிழ் தாயின் 
மூன்றாவது மகளே 
ஆனி ! வா நீ ! 

முடிந்தவரை கோடையை 
தனித்து குளுமையை 
அழைத்து வா நீ ! 
ஒரு அம்மானை 
சும்மாவேனாலும் பாடி வா நீ ! 

ஆனி இவள் 
அதிசய ராணி ! 
இளவேனிற் வாணி ! 
இளநீரில் நீராடி 
வா நீ ! வாணி ! ஆனி !

5.13.2012

வைகாசி ..!

வைகாசியிலும் தொடரும்
வாடைக் காற்றின் வாடை !

ரிஷபத்தில் தற்பொழது
சூரியனுக்கு வேலை .!

காத்திருப்போம் நாம் !
வழிமேல் விழி வைத்து
நாளை வரும்
இளவேனிற் நாளை !

அதிகாலையிலே
அக்னியின் வாசம் !

வைகாசி இவள் மீது
கோடைக்கு கொஞ்சம்
கூடுதல் பாசம் !

தென்றல் அவ்வபொழுது
அரைநொடி வந்தணைத்து
போவதுதான் சோகம் !
கொஞ்ச நேரம்
குளிர்ச்சியாகுது தேகம் !

4.28.2012

சித்திரை ..!

உன் நல்வரவால்
கதிரவனின் மனமகிழ்வால்,
கத்தரியின் கண் திறப்பால் ,
முத்திரை பதித்ததாம்
எத்திக்கும் கோடை .!
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.

4.16.2012

சர்வர் பையன் ..!

 

ஆடி களிக்க வேண்டிய வயதில்
பசியை விரட்ட ,
பணத்தை தேடி ,
பட்டணத்துக்கு ஓடி ,
இளமை ஆசைகளை துறந்து ,
மேசை துடைத்து ,
தோசை படைத்தது -வெறும்
சம்பாஷணைகளுக்கு தலை
அசைக்கும் இளம்தளிர்
சர்வர் பையன் இவன்..!

சரித்திரம் படிக்கவேண்டிய வயதில்
தரித்திரம் மிரட்ட
மனதை மறந்து
தினத்தை விரட்டி
தனத்தை தேடும்
இந்தியாவின் எதிர்காலம் ..!

பொத்தைக்குள் கால் சட்டை .!
அதற்குள் அந்த அதிர்ஷ்ட கட்டை..!
கால்சட்டைக்குள் மட்டும்
பொத்தைகள் இல்லை !
இவன் எதிர் கால
கனவு பாதையிலும் தான்.!

ஆள்பவர்களே .!
ஒரு நிமிடம் கேளும்..!
என்ன இந்த பாழ்மக்கள்
செய்த பாவம் ?
என்றாவது தீருமா இவர்களது
ஏழ்மை தாகம் ??

படைத்தவனே..!
கண் திறந்து பாரும் !
இப்பாழ்மக்கள் செய்த பாவம்
எப்போது தீரும் ??
இவர்கள் மேல் உனக்கு
ஏன் எப்போதும்
ஒருதலை ராகம் ???

நீயும் ஏழையாக ஒருமுறை
பிறந்து பாரும் ! உண்மையில்
உன்படைப்பில் நிகழாது
இத்தவறு பின் எப்போதும்...!


2010- ஆண்டு சென்னை-க்கு சென்ற பொது ஒரு உணவு விடுதில் உணவு பரிமாறிய இளம் சிறுவனிடம் பேச்சு கொடுத்தபொது அவன் ஆசைகளை , கனவுகளை என்னால் உணரமுடிந்தது. அதன் வெளிபாடே இந்த கவிதை.! உள்ளத்தில் வந்தமர்ந்த பாரத்தை என்விழி எழுதுகோல் வழி இறக்கிய முயற்சி இது ..!

4.07.2012

அனுபவம்..!

வெற்றிக்கு தோல்வி என்பது
வாயில் படி ..!
வெற்றி எனும் வீட்டினுள் நுழைய
தோல்வியை முதலில் படி..!!

வெற்றியையும் தோல்வியையும்
அணு அணுவாய்
அனுபவித்துப் படி .!

இரண்டும் ஒன்றே என்ற நிலைக்கு
மனதை பக்குவபடுத்தும்
அனுபவத்தைப் படி ..!!

ஒருமுறை செய்த தவற்றை மீண்டும்
செய்யாதிருக்க அனுபவத்தை படி..!!
அகந்தையை அடியோடு
துடைத்து எறி..!!
படி படியாய் திட்டமிட்டு வெற்றியை
கெட்டியாய் பிடி .!!!

ரோஜாவுடன் முள் என்பது
இயற்கையின் நியதி ..!
வெற்றியும் தோல்வியும் என்பது
மனித வாழ்வியல் விதி ..!!

வெற்றியும் தோல்வியும் மனிதனாக
ஏற்படுத்திக் கொள்ளும் சங்கதி ..!
இதில் இல்லை இயற்கையின் சதி..!!

3.25.2012


மீனவன்...!


கடற்கரையில் குடியிருப்பு ,
கடைசிவரை பரிதவிப்பு .!

கண்ணீரின் அணிவகுப்பு , 
கால்வயிற்று கஞ்சியில் களிப்பு .!

அதிகாலையில் பயணிப்பு ,
தண்ணீரின் சலசலப்பு .!

உப்புக்காற்றில் சுவாசிப்பு ,
படகுகளின் அணிவகுப்பு .!

புயல் கடல்சீற்றம் ஏற்பட்டால்
ஊதியம் இல்லா விடுப்பு .!

மாசிபங்குனியில் மீன்களின் கணக்கெடுப்பு ,
சித்திரை வைகாசியில் இவர்களுக்கு
கட்டாய விடுப்பு .!

எந்த ஆயுள் காப்பீட்டுகழகம் அளிக்கும்
இவர்களுக்கு காப்பீடு .!

தினம் தினம் உயிருக்கு போராட்டம் ,
தண்ணீரில்தான் இவர்களின் ஆட்டம்,
பாட்டம் ,கொண்டாட்டம் .!
அங்கீகரிக்கபடாத அரைக்கச்சை கூட்டம்..!!

நாள்கணக்கில் மாதகணக்கில் உழைப்பு ,
இருந்தும் வறுமையின் களிப்பு .!

இன்னல்கள் பல இருந்தும்
இருக்கத்தான் செய்கிறது கொண்டாட்டம் .!

கடல்தான் இவர்களின் வீடு
மற்றும் முதலீடு .!
கடைசிவரை போடும் சோறு .!!

தரைமேல் பிறந்து தண்ணீரில் வாழ்ந்தாலும்
கண்ணீரில் குளித்தாலும் ,
இவர்களும் மனிதர்கள் தான் .!
இறைவனின் செல்லப்பிள்ளைகள் தான் ,

விடுவுகாலம் வருமா ?
சிங்களம் விடுமா ?
சிறுத்தைகள் மீண்டும் உயிர்த்தெழுமா ?
தமிழினம் சினந்தெழுமா ?
தண்ணீரில் கொலை விழுவது தகுமா ?

தமிழன்னையே பொறும்மா .,
தக்கார் வருவார்,தகவிலார் அழிவார் ,
உன் துயர் துடைத்து எறிவார் ...

மீனவம் பேணுவோம் !
ஆணவம் விரட்டுவோம் !! 
மானுடம் போற்றுவோம் !!! 

3.10.2012

உலாப்போகும் நிலாக்காலம் ..!

முற்றத்து சுற்றங்களுக்கு வணக்கம் .கவிதை புத்தகம் பிரசுரிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு (ஐந்து ஆண்டு முயற்சி ) இந்த ஆண்டு பொங்கல் அன்று நிறைவேறியது . நேரமின்மை காரணமாக உங்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை . புத்தகத்தின் முன் பின் அட்டையின் தோற்றத்தை உங்கள் பார்வைக்காக இணைக்கிறேன் இங்கே .. இது என் முதல் வெளியீடு . வெளியீட்டாளர் நிவேதிதா பதிப்பகம் ,s -21 ,பாலகிருஷ்ணா அடுக்ககம் ,பெரியார் பாதை ,சூளைமேடு ,வடபழனி ,சென்னை .
படித்தபின் உங்களின் மேலான கருத்துகள், குறை நிறைகளை வரவேற்கிறேன் ..
என்னுடைய blog முகவரி http ;//vasikarapriyan .com ,
என்னுடைய face book முகவரி sivakumar ganesan ,வலைமுகவரி andiessiva @ rediffmail .com .
பின்குறிப்பு . நிலா அவர்களுக்கு ,
இந்த செய்தியை எந்த பகுதியில் சேர்க்கவேண்டுமோ அங்கே சேர்த்துவிடவும் .படங்களை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை . தெரிந்தவர்கள் உதவவும்

3.04.2012

பெண் ..!


திருமணத்தின் மூலம் உறவாகி , 
சித்திரையில் வாரா நித்திரையால் , 
கைபிடித்த கணவன் அளித்த 
லட்சத்து சொச்ச வித்ததினால், 
வேதனையை தனதாக்கி , 
இன்பத்தை பொதுவுடமையாக்கி , 
திரவத்தை திடமாக்கி , 
உணர்ச்சியை உயிராக்கி , 
உதிரத்தை உணவாக்கி , 
வயிற்றை உறவிடமாக்கி , 
உலகமஹா அறிவியலையே உருவாக்கி , 

ஓர் உயிரில் ஓர் உயிரை உருவாக்கி , 
ஒன்பது மாதத்தில் உருவத்தையும் உருவாக்கி, 
துன்பத்தையும் துயரத்தையும் தனதாக்கி, 
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் 
பெருமையையும் பொறுமையையும் உருவாக்கி , 
உவகையையும் மழலையாக்குவாள், 
மனைவி எனும் உன்னதமான பெண் .! 

தாயாகி தங்கையாகி குடும்ப தலைவியாகி , 
மாமியாராகி மைத்துனி யாகி 
அண்ணியாகி அக்காள், மகளாகி 
ஆயிரம் உருவம் எடுத்து வந்தாலும் 
அமைதியான சுமைதாங்கி 
அவளே அல்லவா ... 

2.28.2012

நாக்கு..! நாக்கு ..!!

நீருக்குள் ஜலசமாதி !
நினைத்த உடனே ,
வெளியில் வரும்
உடலின் பாதி !!
எலும்பிலா ஜாதி !!!
எளிதில் உணர்ச்சி
வயப்படும் வியாதி !!!!

வாயில் வசிக்கும் ,
உமிழ் நீரில் இருக்கும் ,
பிறர் உணர்வை
பல சமயம் சிதைக்கும் !
சொல்லம்பு தொடுக்கும்
ஐம்புலன்களில் ஒன்று !!

பற்கள் காவலிருக்க - சுவை
முட்கள் மேலிருக்க ,
சொற்களை அள்ளிதெளிக்கும்,
உணவை அரைக்க உதவிநிற்கும்
திணவு முதலை !

பற்களுக்கு வெளியே வந்து
கொட்டும் குளவி !
இதை எப்படி கட்டுபடுத்துவது?
இதுதான் மனிதனின் கவலை !
கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்
இது கனவிலும் கவிதை !!

தடுப்பணை தகர்ந்தால் - இது
உணர்வுள்ள விதவை !
ஊழிசெய்ய காத்திருக்கும்
உயருள்ள மிதவை !!

காவலிருக்கும் பற்களை
கடைக்கண்ணால் ஏமாற்றிவிட்டு ,
இரத்தமின்றி சத்தமின்றி
காயப்படுத்தும் வித்தை கொண்ட
உடலின் உணர்வு அணிகலன் !

இயற்க்கை தந்த சாதனம் !
இனிய தமிழ் பேசிடும் !!
உறைக்குள்ளே புகலிடம் !!!
உண்மையில் இருட்டறையில்
என்றும் உறைவிடம் !

கண்ணிலும் நீர், நாவிலும் நீர்
இரண்டுமே சக்தி வாய்ந்தது !
கண்ணைவிட்டு நீர் வெளியே
நீரை விட்டு நா வெளியே !!
விளைவு ! விபத்துதான் !!!

கண்ணீர் உவர்ப்புத்தான் !
உமிழ் நீர் செரிப்புக்குத்தான் !!
தவறாக பயன்படுத்தும் போது
இரு நீராலும் எஞ்சுவது
மனிதனுக்கு தவிப்புத்தான் !!!

2.15.2012

அரசியல்வாதிகள்...!

ஆற்றில் வலைவிரித்து,,
நிலவில் மீன்பிடித்து,
ஆகாயத்தில் உலரவைத்து,
சேற்றில் தீ மூட்டி,
நாற்றில் சமைத்து ,
காற்றில் பரிமாறும்
கலியுக கயவர்கள்.!

வயிற்றில் தினவுற்று ,
வாயில் மடைபோல்
சொல் எனும் ஊற்றெடுத்து ,
கயிற்றில் பால்கறந்து ,
நாரில் உறையவைத்து ,
வேரில் வெண்ணை எடுத்து,
பனைவாரில் பதபடுத்தி,
தினம் யார் யாருக்கோ
விற்பனை செய்யும்
வாய்சொல் விற்பன்னர்கள்..!


கானல் நீரைத் தேக்கி ,
காகித பூ கொண்டு ,
வானில் அணை கட்டும்,
விண்மீன் களுக்கிடையே,
நெல்மணி அது கொண்டு ,
செல் வழி பாலம் ,
சொல்லின் வழி அமைக்கும்,
நல்வழியில் நடப்போரை
வானுலகம் அனுப்பிவிட்டு,
ஏதேதோ செய்து,
எப்படியும் பொருள்சேர்க்கும்
அருள் வழி மறந்த
புனித ஆத்மாக்கள் ..!

கொசுவலை உடன் சென்று ,
பசுவின் சிசு அது கொண்டு ,
எலியின் வலையில் பதுங்கி,
புலி வேட்டையாடும்
பூவுலக மாக்கள்.!

வன்மனம் கொண்டு ,
தினம் ஒரு பூவின் மணம் நாடும்,
ஏழையின் மனவலியில்
பொருள் இல்லில்
துன்ப உழலில்
குளிர் காயும்
மண்ணுலக எமன்கள்..!

2.13.2012

கருவறை ..!

இருவரின் கூட்டு முயற்சி .,
இரண்டு நிமிட இன்பம் .,
இரண்டு துளி வெண்மணி .,
பயணிப்பதோ பல மணி .,

இறுதியாய் உறை வது
சூரியன் புகா நிலவறை.,!
உண்டு உறங்க ஓர் அறை.!
சுவாசிக்க ஓர் உறை .!

சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!
ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!
அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்
இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!

கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!
விலைமதிப்பில்லா ஓர் அறை .!
இத்தனை சிறிய ஜான் இடம் ,
இதற்குள் உறைவது எத்தனை
பெரிய மானுடம் ..!!!

1.27.2012

கடிகாரம் ..!


கையின் மணியாரம்,
மணிகாட்டு, சுவர், மரப்பெட்டி,
இவன் வசிக்கும் ஊராம் !
கண்ணுடன் அவ்வப்பொழுது
நேர்கோட்டில் புரியும்
பனிப் போராம் ..!!
சிறியமுள் பெரியமுள் என்று
இரண்டு பேராம் .!
காதலித்து கைப்பிடித்தவர்கள்
இவர்கள் தானாம் .!!
ஊடல் கூடல் எல்லாம்
இவர்களின் பொழுதுபோக்கு தானாம் !!!

காதலியவள் மணிக்கு
ஒருமுறை அசையும்
திருவாரூர் தேராம் !
கைப்பிடித்தவன் கடமையாற்ற
கடைசிவரை ஓடும்
இதயத்துடிப்பு போலாம் .!!

நொடிமுள் ! இது இவர்கள்
ஈன்ற குழந்தையின் பேராம் !!
இவன் ஓடும் வேகத்தில்
தந்தையைவிட அறுபது மடங்கு
கூடுதல் தானாம் !!!
இருவரும் இணையும் போது
மணி ஈராறாம் !
அரை நிமிட கூடல் ,
ஆடல்! பாடல்!! அதன் பின்
மோதல் !!! சினம் கொண்டு
அறுபத்து நான்கு நிமிட ஊடல் .!!!!
பின்பு அரை நொடியில் காணாமல்
போகும் அதிசயம் பாரும் !!!!

ஆறில் ஈராரையில் வரும்போதும் ,
ஒன்பதே முக்காலைத் தொடும் போதும் ,
மூணே முக்காலில் கண்படும் போதும் ,
இவர்கள் நேருக்கு நேர்
முகம் காணல் !
சற்று நேரம் நாணத்தில்
இருவரும் பாரும் !!
இவர்கள் பெயர் தான்
கடிகாரம்!!! கடிகாரம் .!!!

வசிகரப்ரியன்.க

1.17.2012

அகவை எழுபது ..!


என் தந்தையாரின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு (16 -12 -2011 ) அன்று என் பெற்றோரை பற்றி எழுதிய கவிதை உங்கள் பார்வைக்காக இதோ ..

அப்பாவுக்கு ..!
அகவை எழுபது !
மகவை ஈன்ற பொழுதிலிருந்து
கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்கையில்
உண்மை வலியது
என்பது ஓங்கி ஒலிக்குது .!!

அனுபவ சுவைகளை
அனுபவித்த ரேகைகள்
முகத்தில் தெரியுது !
உவகை புரியுது !!

நிதானம் பேசுது !
நீதி நேர்மை - நீ
கடைபிடித்த வாய்மை
வெளியில் பேசுவது
வளியில் கேட்குது !!

திருமண மாகி
இருமனமும் ஒருமனமாகி
ஆகிறது அகவை
நாற்பத்து ஆறு !

நீங்கள் வாழ்வாங்கு வாழ
ஆயுட்காரகனே வந்து
பிணி களைந்து
பணிவிடை செய்து
சிவனிடம் கேட்பாரு !
அவன் மகனிடம்
காணிக்கை இல்லாமல்
கோரிக்கை வைப்பாரு !!

ஆனை முகத்தானிடம்
பேருவகை அளிக்க
பெருமையோடு பரிந்துரைப்பாரு.!
மகிழ்ச்சியை மட்டுமே
பகிர்ந தளிப்பாரு.!!

வீழ்த்த மனமில்லாமல்
எருமை வாகனரே
வாழ்த்த வருவாரு !
வளமை தருவாரு !!

மங்கள இசையில்
வெண்கல குரலில்
கண்கள் ஒளிர
எங்கள் உணர்வில்
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துப் பண்கள் பாடி
ஒரு மாமாங்கம்
பூஜை செய்வாரு .!
நீங்க பல்லாண்டு பல்லாண்டு
வாழ்வாங்கு வாழ
வகை வகையாய்
வாழ்த்திப் போவாரு !!

1.08.2012

வதந்தி ..!



கொடுத்த வனுக்கே
வந்து சேரும் .!
வழியில் வருவோரெல்லாம்
வாயால் மெல்ல நேரும் !!

புழுதி சுமப்பது .!
சில சமயம்
அவதூறை கிளப்பிப் போகும் .!!
பல சமயம்
பழிபாவம் வந்து சேரும் .!!!

உதடு உதிர்க்கும்
காட்டுத் தீ .!
இதில் உண்மை இல்லை ..
உணர்ந்து கொள் நீ ..!!

போய்வந்த பாதையின்
அடிச்சுவடு இல்லை !
வரையறை என்னும்
அரிச்சுவடும் இல்லை .!!


வசிகரப்ரியன்


1.07.2012

தலைமுடி ..!

உயரத்தில் இவன் குடியிருப்பு ,
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு ,
தலையில் இருக்கும் வரை
அப்படி ஒரு கவனிப்பு ,
தவறி உணவில் விழுந்தால்
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!

இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..!
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை
இவர்களின் கணக்கெடுப்பு ..!!
உள்ளவரை தலைக்கு
அழகான கரும்பொன் காப்பு ...!!!
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன்
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!!

பெண்ணின் அழகுக்கு வேண்டும்
இவன் அருள்பாலிப்பு .!
மனமிருந்தால் கொடுக்கலாம்
சிறப்பு பாதுகாப்பு .!!
மணமில்லை என்பது
இவனின் தனிச்சிறப்பு ..!!!

இளமையில் இவன்
நிறமோ கருப்பு .!
நடுதர வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
இவனை வைத்து
கொலையாளியை பிடிக்கலாம் என்பது
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!!

மொத்தத்தில் இவனை
பேணிகாப்பது என்பது
நம் பொறுப்பு .!
இருப்பதை விட்டு
இழந்தபின் புலம்புவது என்பது
பொறுப்பற்ற பிழைப்பு ..!!

வசிகரப்ரியன்.க

1.06.2012

வெண்குழல் புகை (சிகரெட் )..!

கொட்டை வடிநீர் நிற மேனி !
தட்டை வடிவான
வெள்ளை சட்டை உடுத்தி ,
கட்டழகன் அவன்
கைவிரல்களை கட்டிப்பிடித்து ,
வட்ட வடிவான முகத்தின்
நட்ட நடுவான இடத்தின் ,

கிட்ட குழித்து
எட்ட குவியும் இதழுடன்
ஒட்டி உறவாடி,
எள்ளி நகையாடி ,
வாயில் நாவில் சுவையாடி,
வஞ்சம் கொஞ்சம் மறக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சை பரப்பும் ,

பஞ்சு நிறத்தில்
மூச்சில் நடமாடி ,
வாயில் பேச்சில் விளையாடி ,
மூக்கின் வழியே
காற்றில் கலக்கும் ,
புண்பட்டார் நெஞ்சை
புகை கொண்டு ஆற்றும் ,
வெண்மை நிற புகையே ..!!

உன்மீது,
இன்முகம் கொண்ட
இளைய தலைமுறைக்கு
இத்தனை பாசம் ஏன் ??
சுருள் அலை வடிவில்
இருந்து கொண்டு
பெரும் வல்லமை படைத்த
அறிய மானுடத்தை
உரு தெரியாமல் ஆக்கி
தெரு தெருவை சுற்ற விடுகிறாயே ???
உன்பெயர்தான் சிகரெட்டா ???
இதுதான் உந்தன் சீக்ரெட்டா ???

வசிகரன்.க

புது விசை: வீடுகள் அங்கேயே இருக்கின்றன

புது விசை: வீடுகள் அங்கேயே இருக்கின்றன